Sunday, July 10, 2011

அறியாரோ?

நான் ஜீன்ஸ் அணிவது
அம்மாவுக்கு மட்டுமல்ல
அண்ணாவுக்கும் பிடிக்காது.
சேலை அணியச் சொல்லி
பல அறிவுரைகள் தினமும்.
சின்னச் சின்னச் சண்டைகள்
'ஆட்டக்காரி' என்று என் காதுபட
அயலாரின் முணுமுணுப்புக்கள்
...................
சேலை அணிந்து பயணிக்கையில்
'பிரா' வை,
 நழுவும் உட்பாவாடையை
சரி செய்யும்பொழுதுகளில்
நடுவில் தெரியும்
வயிற்றை மறைபதற்காய்
நான் முயலும் பொழுதுகளில்
 நான்படும் அவஸ்தைகளை 
மொய்க்கும் காமக்கண்களை
அம்மா அறியாளோ?
அண்ணாவும் அறியானோ?
அயலார் அறியாரோ?
_ தாரணி

Saturday, July 2, 2011

தோழி...! உனக்குத்தான்

தோழி...! உனக்குத்தான்
====================
தாலி அணிந்து
தலை குனிந்து உன் மாமியுடன்
வெள்ளவத்தையில் நீ
நடந்து சென்றது நேற்றுக் கண்டேன்.
உன்னுடன் பேச எனக்கு விருப்பமில்லை
அதனால் ஒதுங்கிப் போனேன்.

இந்தியாவுக்கு வந்து
தாலி கட்டிவிட்டுச் சென்ற
உன் கணவனிடம் செல்ல நீ
கொழும்புக்கு வந்துள்ளாய் போல
நன்று!

போய் வா தோழி!
அந்தக் காலத்தில்
நீயும் நானும்
பெண்விடுதலை,சம உரிமை
என்றெல்லாம்
கல்லூரியில் மேடை ஏறி பட்டிமன்றங்களில்
முழங்கியதெல்லாம பொய்யா?

குமரன்,
உன்சாதி இல்லை என்பதனால் தானே
நீ உன்னை உயிராய்
நேசித்தவனை விட்டு விட்டு
உன் கொள்கைக்கு(?) மாறாய்
சீதனம் கொடுத்து
நாளை கனடாவுக்கு
போகிறாய்!

நீ ஒருத்தி மட்டுமல்ல
உன்னைப் போல
பலர் இங்குள்ளார்.

என் பேனா எழும்
அடிமைப்படுத்தும்
ஆண்களுக்கு எதிராய்
மட்டுமல்ல
உன்னைப் போல
மாஜக் காரிகைகளுக்கு
எதிராகவும் எழும்.
-தாரணி

Tuesday, June 7, 2011

உண்மையைச் சொல்லிவிடு

மெல்ல அசையும் தொங்குபாலமதில்
நாங்கள் கரம் கோர்த்து
நடந்த பொழுதுகளில்
நீ வெள்ளாளன் என்பதும்
நான் அதுவல்ல என்பதும்
உனக்குத் தெரியாதா?

துள்ளி ஓடும்
மாவலியின் கரைகளில்
நாங்கள் பரவசித்திருந்த பொழுதுகளில்,
நீ கத்தோலிக்கன் என்பதும்
நான் அதுவல்ல என்பதும்
உனக்குத் தெரியாதா?

மூங்கில் ஓரம்
பற்றைகளின் மறைவில்
நாங்கள் சல்லாபித்திருந்த பொழுதுகளில்,
உனக்குச் சீதனமாய்த் தர
எங்களிடம் 'வெள்ளவத்தை'யில் சொந்த வீடோ,
அது வாங்க வசதியோ இல்லையென்பது
உனக்குத் தெரியாதா?

உன் சாதகம் இப்போது
'வேல் அமுதன் திருமண சேவை'யில்
பத்து மில்லியன் பிரிவுக் கோப்பிலும்
என் பெயர் ஊராரின்
'நடத்தை கெட்டோர்'
பட்டியலிலும் இருப்பது
உனக்குத் தெரியாதா?

அக்காவின் வீடு

'உன் வீட்டிலிருந்து
என்ன கொண்டு வந்தாய்'
அக்காவிடம் கேட்டார் அத்தான்

கோபித்துக் கொண்டு
பிறந்தகம் வந்தாள் அக்கா

'முதலில் உன் வீடுக்குப் போ ஆரணி
மற்றவை பிறகு கதைக்கலாம்'
அக்காவிடம் சொன்னாள் அம்மா

'என் வீடு எது தாரணி?'
இன்னும் தன்வீடு எதுவெனத் தெரியாமல்
என்னிடம் கேட்டாள் அக்கா

எதுவும் கேட்க வேண்டாம்


என்னை எதுவும் கேட்க வேண்டாம்
என் அம்மா சொல்வது போல் நான் வேண்டுமென்றே 
எந்த எந்தவொரு ஆணின்  முன்பும்  'இளித்து'க்கொண்டு நிற்பதில்லை
என் முக அமைப்பு அப்படி
நான் சும்மா நின்றாலே அவளுக்கு  அது
சிரிப்பது போலிருக்கும்

என் அண்ணன் சொல்வது போல்
'மாப்பிள்ளை பிடிக்க' நான் 'பேஸ் புக்'
பயன் படுத்துவதில்லை
என்னுடன் 'சட்'   செய்யவந்து விட்டு
என் வயதை
ஊரை
சாதியை

சமயத்தை
ராசியை
நட்சத்திரத்தை
தொலைபேசி இலக்கத்தை

என்  அங்கங்களின்  பரிமாணங்களை

மாதவிடாய் வரும் நாட்களை
....................
.......
இனியும் கேளாதீர்கள் !
நீங்கள் கேட்டு நான் சொல்லாவிட்டால்


தூஷணங்களால் என்னை ஏசாதீர்கள்

நான் செய்வதெல்லாம்
எனக்குப் பிடித்தவர்ருக்கு
வெறுமனே 'லைக்' என்று குறிப்பிடுவதும்
கருத்துக்கள் இடுவதும்
மட்டும் தான்

'நீ ................ கிழவங்களுக்கு
மட்டுந் தான்
கருத்துக்கள்
போடுவியா வேசை' என்று
இனியும் ஏசாதீர்கள்.

நான் செய்த தெல்லாம்
எனக்குப் பிடித்தவற்றுக்கு
கருத்துக்கள்
போடுவது மட்டுந்தான்!